அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Thursday, January 31, 2013

கருத்துரிமையின் விஸ்வரூபம் .........




தங்களை  பதிவுலக ஜாம்பவான்களாய்  அடையாளப் படுத்திக் கொள்வதற்காய் தான் கண்டதற்கும் கேட்டதற்கும் கை கால் பொருத்தி பதிவுகள் இடும் சில  பிரபல(?) இணையப் பதிவர்களுக்கு மத்தியில் நான் நேற்று முளைத்த காளான்.......
ஒரு திணிப்பாய் என் கருத்துக்களை நான் சொல்ல விரும்பவில்லை
சில கேள்விகளாய் முன்வைக்க விரும்புகிறேன் .......
கடந்த ஒருவாரமாக இணையம் முழுக்க விஸ்வரூபமெடுத்து இருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் பற்றி ஒரு இந்திய இஸ்லாமியனாய் எனது கருத்தையும் சொல்ல முயற்சிக்கிறேன்..........
விஸ்வரூபம் என்ற திரைப்படம் தடை செய்யப் பட்டதை தொடர்ந்து ''ஒரு கலைஞனின் கருத்துரிமை'' பறிக்கப்பட்டு விட்டதாக இணையமெங்கும் ஒரே பேச்சு......
ஒரே ஒரு கேள்வியை முன்வைத்து இந்த பதிவினை துவங்குகிறேன்...
''ஒரு கலைஞனின் கருத்துரிமை பறிக்கப்பட்டதாய் கொந்தளிக்கும் நண்பர்களே...
ஒரு மதத்தின் மனம் ரணப்பட்டதாய் சொல்லப்படுவதை ஏன் உங்களால் மறுபரிசீலனை செய்யமுடியவில்லை......?
ஒரு மனிதனைக் கழுத்தறுத்துக் கொல்லும் காட்சியின் பின்னணியில் பகவத் கீதையின் வாசகங்களோ அல்லது பைபிளின் வாசகங்களோ ஓட விடப்பட்டிருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மதத்தவரின் பதில் மவுனமாய் இருக்குமெனில் நான் உங்களின் நியாயங்களோடு உடன்படத் தயாராய் இருக்கிறேன் பகிரங்கமாக ....(அப்படிப்பட்ட காட்சிகள் உண்டெனில் மட்டும்)
இங்கே இஸ்லாமியர்கள் கேட்பது என்ன.....?
தங்களின் உணர்வுகள் பாதிக்கப் படுகிறது என்பதுதானே.....?
தங்களின் உணர்வுகள் கொச்சைப்படுத்தப்படுவதாய் இந்த படத்தில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது என்பதின் அடிப்படையில்தானே அவர்கள் எதிர்க்கிறார்கள்.....?
ஆதரிக்கும் நீங்கள் சொல்வது கருத்து சுதந்திரமெனில் எதிர்ப்பவர்கள் சொல்வது மட்டும் எப்படி பாசிசம் ஆகும்?
அப்படியே கமல் சொல்வதுபோல் இந்தப் படத்தில் காட்சிப் படுத்தப்படிருப்பதுதான் இஸ்லாத்தின் உண்மை முகமெனில் இஸ்லாமியர்கள் அதை ஏன் எதிர்க்கப் போகிறார்கள்.....? தங்களின் மதம் கவுரவப்படுத்தப் பட்டிருப்பதாய் நினைத்து மௌனம் காத்திருக்கலாமே...?
நாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை , தீவிரவாதத்திற்கு துணை செல்பவர்களாக எங்களை சித்தரிக்காதீர்கள் என்றுதானே போராடுகிறார்கள்???
சக நண்பர்களாய் இருக்கும் எங்களின் மாற்றுமத சகோதரர்கள் எங்களை எதிரிகளாய் பார்க்கும் ஒரு சூழலை உருவாக்காதீர்கள் என்றுதானே கெஞ்சுகிறார்கள்...?
இதில் எங்கே வந்தது இஸ்லாமிய பாசிசம் ?

''இந்தப் படம் தடை செய்யப்பட்டால் கமலஹாசனுக்கு ஏற்படப் போகும் பொருளாதார இழப்பை யார் ஈடு செய்வார்கள் ''- என்ற ஒரு முட்டாள்தனமான வாதம் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப் படுவது வேதனையளிக்கிறது .......
இங்கு பிரதானம் பணமா இல்லை உணர்வுகளா என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை 
அதேநேரம் ஏதோ ஒரு இஸ்லாமிய அமைப்பு கமலஹாசனின் பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட முன்வருமெனில் அதற்கு அவர் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அவர் தனது கருத்து சுதந்திரத்தை விற்றதுபோல் ஆகிவிடாதா?
அப்படி ஒரு சம்பவம் நடந்தால் இஸ்லாமிய அமைப்புகள் ஒரு கலைஞனின் கருத்து சுதந்திரத்தை காசு கொடுத்து வாங்கிவிட்டதாகஇதே இணைய வாய்கள் பேசாதா..?
அதே நேரம் அவருடைய இழப்புகளை ஈடுகட்டிய இஸ்லாமிய அமைப்புகள் ''நாங்கள் இப்படித்தான்'' என்று ஒப்புக்கொண்டது போல் ஆகிவிடாதா?
அப்படி பயப்படும் இஸ்லாமிய அமைப்புகள் ஒரு குதிரை பேரத்தில் ஈடுபட்டிருக்கலாமே , முழுக்க முழுக்க இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்து செயல்படவேண்டிய அவசியம் இல்லையே....
எனக்குப் புரியவில்லை....
கிட்டத்தட்ட கமலஹாசனின் எல்லா நல்ல திரைப்படங்களையும்  பார்த்தவன் என்ற முறையில் கேட்கிறேன்..... '' கமலஹாசன் என்ற தனிமனிதனை இந்திய முஸ்லீம்கள் இதற்குமுன் எத்தனைமுறை எதிர்த்தார்கள் ''?
இங்கே இன்னொரு கருத்தையும் மிக ஆழமாக பதிவு செய்ய விரும்புகிறேன்....
இஸ்லாம் என்ற மார்க்கம் குறித்து எவருக்கு என்ன சந்தேகம் வந்தாலும் அதற்கு இஸ்லாமிய மரபுகளின் அடிப்படையில் யாராலும் மறுக்கமுடியாத பதில்களை சொல்லத் தெரிந்த   மரியாதைக்குரிய பி .ஜைனுலாபுதீன் அவர்களின் விஸ்வரூப எதிர்ப்பு சம்பந்தமான பேச்சு கண்டனத்திற்குரியது என்பதைவிட மிக மிக கண்டனத்திற்குரியது என்பதை இங்கே பகிரங்கமாக பதிவுசெய்ய விரும்புகிறேன்...... பாரதி ராஜா பேசியதும் தவறு என்பதை இதே இணையத்தில் எத்தனை பேர் பதிவு செய்தீர்கள் ....?
உணர்ச்சி வசப்படுதல் என்பது இயக்குனர் பாரதிராஜாவுக்கு வேண்டுமானால் யதார்த்தமாய் இருக்கலாம் ஆனால் ஒரு இஸ்லாமியனுக்கு உணர்ச்சிவசப்பட்டு கருத்துசொல்வது தடை செய்யப்பட்டு இருக்கிறது என்பதே எனது அறிவு.....
அவர் அப்படிப் பேசியது எந்த அளவுக்கு தவறோ... அதேஅளவிற்கு அவர் அப்படிப் பேசியதற்கு முன்னும் பின்னும் பேசியதின் சாரத்தை ஊடகங்கள் மறைத்தது.... எதை எப்படி யார் நியாயப் படுத்தினாலும் என்னைப் பொறுத்தவரை அவர் அப்படிப் பேசியது தவறுதான்...... அதற்காக அந்தப் பேச்சால் பாதிக்கப் பட்டவர்களிடம்  மன்னிப்புக் கோருகிறேன்.......
ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஒரு முன்னாள் பிரபல இயக்குனரின் கேள்வி என்னை மிகவும் ஆச்சர்யப் படுத்தியது.... பாகிஸ்தானிய ராணுவம் ஒரு இந்திய சிப்பாயின் தலையை கொய்து சென்ற போது என்ன செய்தார்கள் இந்த இஸ்லாமியர்கள்....? என்பதாய் இருந்தது அந்த மில்லியன் டாலர் கேள்வி.....
இஸ்லாமியர் அல்லாதவர்கள் என்ன செய்தார்கள் என்பதை விளக்கிவிட்டு இந்த கேள்வியை அவர் கேட்டிருந்தால் அதற்கு பதில் சொல்ல வசதியாய் இருந்திருக்கும்.... ஒரு சூடுபட்ட பூனையின் குமுறலாய் மட்டுமே அதை என்னால் பார்க்க முடிந்தது...... 
இதே இடத்தில் இன்னொரு கேள்வியையும் இங்கே கேட்க விரும்புகிறேன்.... இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் சமூகம் சார்ந்த போராட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க இங்கே எத்தனை ஊடகங்கள் தயாராய் இருக்கிறது....???????????
இத்தனை நாள் எங்கே போனார்கள் இந்த இஸ்லாமியப் போராளிகள் ? என்ற கேள்வியை நான் மிகவும் மதிக்கும் சில புத்தி ஜீவிகளும் முன்வைத்தது எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. போராடுவதற்கான முன் அனுபவமும் காலவரையறையும் எப்போது நிர்ணயிக்கப் பட்டது....?தாம் வஞ்சிக்கப் படுகிறோம் என்ற விஷயம் புத்தியில் உறைக்கும் போதுதானே தமது கண்டனத்தை பதிவு செய்ய முடியும்....? அது தாமதமாய் வருவது தவறா?
அப்படிப் பார்த்தால் ஆங்கிலேயன் நம்மை அடிமைப் படுத்திய மறுநாளே நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்க வேண்டாமா....?
அனைத்துமத மக்களும் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒரு சட்ட்டமன்ற உறுப்பினரை அவர் முஸ்லீம் என்பதற்காக மட்டும் அவரை ஒரு பயங்கரத் தீவிரவாதியுடன் ஒப்பிட்டுப் பேசிய ஒரு தொலைக்காட்சியின் செயலை எதிர்த்து இங்கே எத்தனை பேர் தங்களின் கண்டனங்களை பதிவுசெய்தார்கள்???????
உலகத்தரத்தில் எடுக்கப்பட்ட ஒரு தமிழ் சினிமாவை எந்த முகாந்திரமும் இல்லாமல் எதிர்க்கும்  அளவிற்கு முட்டாள் சமூகம் இல்லை இஸ்லாமிய சமூகம்.... இந்த கோணத்திலும் நீங்கள் யோசிக்கலாமே.... இந்த படத்தை முழுமையாக  தடை செய்தே தீரவேண்டும் என்ற விஷயத்தில் எனக்கு நிச்சயமாக உடன்பாடு இல்லை.... ஒரு மதத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாய் சொல்லப்படும் காட்சிகளை நீக்கிவிட்டு திரைப்படத்தை வெளியிடுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பவர்களின் கூட்டத்தில் நானும் இருக்கிறேன்........
யாரையும் புண்படுத்தாத ரீதியில் இந்த திரைப்படம் வெளிவந்து வெற்றி பெறவேண்டும் என்பதுதான் எனது ஆசையும்.........