அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Sunday, August 26, 2012

அம்மாவும் அவளும் ......




காலம் தூக்கிப்பிடித்த வாழ்க்கைத் தராசின்
வலது தட்டில் வந்தவளும்....
இடது தட்டில் ஈன்றவளும்...

இடையில்
துல்லியமற்றாடும் முள்ளாய் நானும்..........

கருப்பு தினமா......???? இந்திய சுதந்திர தினம்...


இந்திய சுதந்திர தினத்தை ''கருப்புதினம்'' என்று  பிரகடனம் செய்த சில மனிதர்களை சமூக வலைத் தளங்களிலும், இணையப் பதிவுகளிலும் பார்க்க முடிந்தது........

இது ஒத்துக்கொள்ள முடியாத போலி சுதந்திரம், கார்ப்பரேட் முதலாளிகளுக்கான சுதந்திரம் , இங்கே சராசரி மனிதனுக்கான எந்த சுதந்திரமும் இல்லை, என்பவையான காரணங்களின் பிண்ணணியில் சுதந்திர தினத்தை புறக்கணிக்க சொல்லி வேண்டுகோள்...

ஆண்ட ஆண்டுகொண்டிருக்கிற அதிகார வர்க்கங்களிடம் இருந்து நம் மக்களுக்கு இன்னுமோர் சுதந்திரம் தேவை என்பதை நான் மறுக்கவே இல்லை....

ஆனால்....
அதற்கும் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்று  புரியவில்லை..... இந்தியக் கால்களில் பிணைக்கப் பட்டிருந்த பிரிட்டீஷ் சங்கிலிகளை உடைத்தெறிந்து வாங்கித்தந்த சுதந்திரத்தை, வசதியாய் இது  ''போலி சுதந்திரம்'' என்ற ஒற்றை வார்த்தையால் எப்படிப் புறக்கணித்து விட முடியும்.....?
காந்தியும் கட்டபொம்மனும் பகத் சிங்கும் நேதாஜியும் இவர்களைப் போல் இன்னும் லட்சக் கணக்கானவர்களும் செய்த தியாகங்களுக்கு நீங்கள் செய்யும்   மரியாதை இதுதானா.....?

ஒரு அந்நிய தேசத்தின் ஆதிக்கத்தின் கீழ் அடிமைகளாய் கிடந்த நமக்கு எத்தனையோ போராட்டங்களுக்கும் தியாகங்களுக்கும் பிறகு ஒருநாள் விடுதலை கிடைத்தது....
அந்த நாளைத்தான் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோமே ஒழிய ஜெயலலிதாவும் மன்மோகன் சிங்கும் கருணாநிதியும் வங்கித் தந்த சுதந்திரத்திற்கான தினத்தை அல்ல.....
தேசியக்கொடி ஏற்றி கடவுள் வாழ்த்துப் பாடி அந்தப் போராளிகளின் தியாகங்களை நினைவு கூர்ந்து தேசியகீதம் பாடி பிரிந்து செல்கிறோம்... இவ்வளவுதானே இந்த சுதந்திர தினத்தில் நாம் செய்கிறோம்.......

இதைக்கூட செய்ய வேண்டாம் என்று புறக்கணிக்கச் சொல்வதில் என்ன அடிப்படை நியாயம் இருக்கிறது....?
நாட்டைச் சுரண்டி நம்மை நடுத்தெருவில் ஆக்கிக் கொண்டிருக்கும் இந்த நயவஞ்சக நரிக்கூட்டத்திற்கு பாடம் புகட்டுகிறேன் என்று சொல்லி..
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சிறையிலிருந்து நாம் மீட்டெடுக்கப்பட்ட நல்ல நாளை கறுப்புக்கொடி காட்டி புறக்கணித்தல் தவறு என்ற  உணர்வு வரவே இல்லையா இவர்களுக்கு.....

சுதந்திர நாட்டின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி பிணந்தின்னி கழுகுகளுக்கு நாட்டைத் தாரைவார்த்துக் கொடுத்தது நாம் எல்லோரும் அடங்கிய மக்கள் சமூகம்தானே.....

அரசியல்குண்டர்கள் அடிமைப்படுத்திய நம் சமூகத்திற்கு இப்போதைய  தேவை விழிப்புணர்வு....
விழிப்புணர்வுக்கான ஆயுதமாய் தேசப் பற்றை தயவு செய்து கையிலெடுக்காதீர்கள் ......
அடிப்படையில் புறக்கணிக்கப் படவேண்டிய விசயங்கள் ஆயிரம் இருக்கிறது...
அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்....

இலவசங்கள் தருகிறேன் என்று எவனும் வந்தால் எட்டி உதைய சொல்லுங்கள்......

காசு கொடுத்து ஓட்டுக் கேட்பவன் முகத்தில் காறி உமிழச் சொல்லுங்கள்

முடிவாய்
ஒரு தேர்தலை புறக்கணிக்கச் சொல்லுங்கள்......

சுதந்திர தின புறக்கணிப்பு என்ற பிரச்சாரம் என்பது... நம்மை மூளைச் சலவை செய்யக் காத்திருக்கும் சில பிரிவினைவாத சக்திகளுக்கு நாமே சிவப்புக் கம்பளம் விரிப்பதாய் ஆகிவிடும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்..
                                                       
-அறந்தாங்கியான்-

Tuesday, August 14, 2012

சுதந்திர தினமும்.... பேஸ்புக்கும்....




இது அரசியல் வாதிகளுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குமான சுதந்திரம்...... இதை கொண்டாடித்தான் ஆக வேண்டுமா ....?- என்ற ரீதியில் சில பல பதிவுகளையும் பின்னூட்டங்களையும் இன்று முகப்புத்தகத்தில் பார்க்க முடிந்தது......

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது சரிதான் என்ற தோற்றத்தை உருவாக்கினாலும் அப்படி புறக்கணிப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது......

ஆயிரமாயிரம் தாலிக்கொடிகளும்,ஆயிரமாயிரம் தொப்புள் கொடிகளும் அறுத்தெறியப் பட்டிருக்கிறது இந்த சுதந்திரக் கொடிக்காக......

எத்தனை போராட்டங்கள் ... எவ்வளவு இழப்புகள்....?

வாழ்க்கை முழுவதும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வை, வருடத்தில் ஒருநாள் நினைவு படுத்திக் கொள்வதைக் கூட தவறென்று சொல்லி முதுகெலும்பற்ற காரணங்களால் அதை நியாயப் படுத்த முயல்வது என்ன மனநிலை என்று புரிய வில்லை.......

இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்காகவும், கார்ப்பரேட் முதலைகளுக்காகவும் வேண்டி நமது முன்னோர்கள் இந்த சுதந்திரத்தை பாடு பட்டு வாங்கவில்லை....

நாமும் நமது சந்ததியும் எல்லா உரிமைகளும் பெற்றவர்களாய் வாழ வேண்டும் என்பதற்காக மட்டும் தான்.......

ஆனால் நாம் என்ன செய்தோம்......?

இலவசங்களுக்கு ஆசைப்பட்டோம்.......
ஓநாய்களுக்கு ஓட்டுப் போட்டோம்......

ஓநாய்கள் தேசத்தை அம்பானிகளிடம் அடகு வைத்தது....

தவறு முழுவதும் நம்மிடம் வைத்துக் கொண்டு சுதந்திர தினத்தை புறக்கணிக்கச் சொல்வது நியாயமா........?

Saturday, June 16, 2012

நித்யானந்தா TO டெல்லி

கடந்த பத்து நாட்கள் நிலவிய பரபரப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கிறது,
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் டெபாசிட் கிடைத்த சந்தோஷத்தில் தேமுதிக ........

ஆன்மீகப் புலிக்கு ஜாமீன் கிடைத்ததில் மதுரை மூத்த ஆதீனத்தின் முகம் மலர்ந்திருக்கிறது .........

பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராய் அறிவித்த அடுத்த நிமிடம் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் ஆதரவு என்ற புள்ளிவிபரம் காங்கிரசின் நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறது.........

ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு ஆன்மீக மடத்திற்கு, சில காலங்களுக்கு முன் ஆவிகளுடன் பேசிக்கொண்டிருந்த அருணகிரி ஞான தேசிகர் மூத்த ஆதீனம், ரஞ்சிதாவை ரகசிய அறையில் கொஞ்சிக்கொண்டிருந்த நித்யானந்தா இளைய ஆதீனம்......
ஆன்மீகமும் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான சமகால சாட்சிகள் இவை......

ஆதீனம் ஆவதற்கு அடிப்படைத்தகுதி விபச்சாரம் செய்யத் தெரிந்திருத்தல் என்ற விஷயம் உறுத்துகிறது............ ஆன்மீகத்திருமடங்கள் அந்தப்புறங்கள் ஆகிவிடாமல் இருந்தால் சரி.............

                                                     ..........*...........*...........*

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது, வழக்கம்போல் முலாயம் பல்டி அடிக்க மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் மம்தா........ பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு கேவலங்களை உற்று கவனித்தவர்களுக்கு புரிந்திருக்கும்........ தான் நினைத்ததை சாதித்துக்கொள்ள காங்கிரஸ் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து இறங்கிப் போகும் என்று......


என்ன காரணமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அப்துல் கலாம் எனும் தமிழரை பரிந்துரை செய்து அந்த முடிவில் இன்னும் உறுதியாகவே இருக்கும் மம்தாவிற்கு எனது தமிழ் சல்யூட்............

ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் திமுக அந்தக்காலம் முதலே முக்கியப் பங்கு வகித்து வருகிறது என்ற பல்லவியை சீசன் மேடைகளில் தொடர்ந்து முழங்கி வரும் திராவிட முன்னேற்ற குடும்பத்திடம் ஒரு கேள்வி........

முக்கியப் பங்களிப்பு என்பது என்ன??????????

மத்தியில் ஆளும் தன் கூட்டணிக் கட்சி முன்மொழியும் பெயரை அட்சரம் பிசகாமல் அப்படியே வழிமொழிவதுதான் முக்கியப் பங்களிப்பா????
கேட்டால் கூட்டணி தர்மம் என்ற சப்பைக்கட்டு.........

1996 களில் ஐக்கிய முண்ணனிஆட்சிக்கு வந்தபோது  யாரைப் பிரதமராக்குவது என்ற ஆலோசனையில் வி.பி.சிங் மற்றும் ஜோதி பாசுவின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு சில காரணங்களால் அது கைவிடப்பட்டு அப்போதைய ஐக்கிய முன்னணியின் கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.மூப்பனார் அவர்களின் பெயரை தெலுங்கு தேசம் உட்பட எல்லாக் கூட்டணிக் கட்சிகளும் பரிந்துரை செய்து ஆதரிக்க முன்வந்த நேரத்தில் ,தனது அரசியல் சாணக்கியத்தனத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து அந்த பிரதமர் பதவியை தேவகவுடாவிற்கு கிடைக்க செய்த திமுக வின் கூட்டணி தர்மத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடியாது .........

அன்று திமுக நினைத்திருந்தால் ஒரு தமிழனால் அந்தப்பதவி அலங்கரிக்கப்பட்டிருக்கும்........ இப்பொழுதுகூட
எங்கோ மேற்குவங்கத்திலிருந்து ஒரு பெண் ஒரு தமிழனை முதல்குடிமகனாக்க முயற்சி செய்கிறார்......
தமிழரையும் தமிழினத்தையும் காப்பதற்காக மட்டுமே தான் இந்த பிறவியை எடுத்திருப்பதாக கூறிக்கொள்ளும் கலைஞர் அவர்களுக்கு கலாமை ஆதரிப்பதில் என்ன சிக்கல்? பதவி ஆசையும் சுயநலமும் தானே......?
ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை அடுக்குமொழி சொல்லி அடுத்தவர்களை புண்படுத்தாமல் இருக்கலாமே.............
''கலாம் என்றால் கலகம்''  ஒவ்வொரு இந்தியனையும் தலை நிமிர்ந்து கொள்ளச் செய்த பொக்ரான் சோதனையின் பிதாமகனுக்கு இவர் செய்யும் மரியாதை இதுதானா?

'' நாங்கள் ஒருமுறை சொன்னதை மாற்றிக்கொள்ள மாட்டோம் '' என்று எப்படித்தான் இவரால்  ஊடகங்களிடம் சொல்ல முடிகிறதோ...........?

இலங்கை போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று ''ஒருமுறை'' இவர் இவர் சொன்னதை எந்தத் தமிழனாவது மறந்திருப்பானா?
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்........

கலாமை விடுவோம் அரசியல் சாயம் பூசாத தேச நலனில் அக்கறை உள்ள வேறு யாருமே இந்தியாவில் இல்லையா...........? சோனியா பயன்படுத்த மன்மோகன் என்ற ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போதாதா? ஜனாதிபதி நாற்காலியிலும் காங்கிரசின் கைப்பாவைதான் இருக்கவேண்டுமா?

2009 களில் ''எனக்கு வயதாகி விட்டது இனி தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை''யென அறிவித்த பிரணாப் முகர்ஜிக்கு 2012 ல் வயது குறைந்துவிட்டதா?

பதவி சுகம் என்ன சாதாரணமானதா? 1984 ல் இந்திரா காந்தியின் மரணத்திற்கு பிறகு தனக்குத்தான் பிரதமர் பதவி என்று தான் கண்டிருந்தகனவு பலிக்காமல் போனவுடன் கட்சியை விட்டே வெளியேறிய பிரணாப்பிற்கு 28 வருடங்களுக்குப் பிறகு கனவு வட்டியும் முதலுமாய் பலித்திருக்கிறது..........

வாழ்த்தித் தொலைவோம் வேறு என்ன செய்ய............


- அறந்தாங்கியான் -

Monday, June 11, 2012

என்னய்யா நடக்குது இங்க......?

ஒரு வழியாக வாக்குப் பதிவை
எட்டியிருக்கிறது புதுக்கோட்டை இடைத் தேர்தல் 

தேமுதிக வேட்பாளர் வெற்றிபெற்றால் பத்து நாளில் புதுக்கோட்டையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தண்ணீர் பிரச்சினையை தீர்த்து விடுவதாக விஜயகாந்த் உறுதி கூறி இருக்கிறார்............

மாவட்டத்துக்காரன் என்ற வகையில் மகிழ்ச்சி அடைகிறேன்.......

அதே நேரம் கேப்டன் சொல்கிற பல விஷயங்கள் எனக்கு புரிவதே இல்லை.
''சாதனை செய்திருந்தால் மக்கள் வெற்றிபெற வைப்பார்கள்'' 
என்று உறுதிபட கூறும் விஜயகாந்த் அவர்களே...............
பொதுவாகவே இடைத்தேர்தல் முடிவுகள் என்பவை பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே அமையும்  என்பது எல்லோராலும் எளிதாய் ஊகிக்க முடிந்த விஷயம், ஊகம் உண்மையாகி ஒருவேளை அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டால் '' அவர்கள் சாதனை செய்தவர்கள்'' என்று நீங்களே ஒத்துக்கொண்டது போல் ஆகிவிடாதா.........?

ஒரு பேச்சுக்கு உங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்..........
நீங்கள் செய்த எந்த சாதனைக்காக மக்கள் உங்கள் வேட்பாளரை வெற்றிபெற வைத்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகிவிடாதா......?

இப்படித்தான் சில தினங்களுக்கு முன் திருச்சியில் நீங்கள் பேசிய போது ஒரு அதிபுத்திசாலித் தனமான கேள்வியை கேட்டீர்கள்..........

'' நான் சட்டசபைக்கு வருவதே இல்லை என்று குற்றம் சுமத்துகிறார்களே..... நான் சட்டசபைக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்பார்களா? '' - என்று,
அமாவாசைக்கும் அப்துல்லாவிற்கும் என்ன கேப்டன் சம்பந்தம்.....?
பெட்ரோல் விலையை தமிழக சட்டமன்றமா நிர்ணயிக்கிறது....?
அது அம்பானிகளால் அம்பானிகளுக்காக நடத்தப்படும் மத்திய அரசு விவகாரம் என்பது கூடவா மறந்துவிட்டது உங்களுக்கு..........?

என்னமோ போங்க கேப்டன்.................

மைக்கை பிடித்த மறுநிமிடம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேல் தீக்குச்சி கிழித்து வீசும் கொள்கை கொண்ட நீங்கள், இந்த இடைத் தேர்தல் மேடைகளில் அவர்களை மறந்து போனதின் மாயம் என்னவோ........?

ஒரு
அரசியல்வாதிக்கான அறிகுறிகள் உங்களிடமும் தென்படத் தொடங்கி இருப்பது ஆரோக்கியமான விஷயம்தான்.......

நீங்க நடத்துங்க கேப்டன்............


புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வருவதை ஒட்டி திருச்சி,புதுக்கோட்டை இடையே ஐந்தாறு மணிநேரங்களுக்கு ஆட்டோ முதல் ஆடுமாடுகள் வரை ஓட அனுமதிக்கவில்லையாம் காவல்துறை.......
இதில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லைதான்,ஆனால்..... ஆபத்தில் கிடந்தவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப் போன ஆம்புலன்சையும்
இரண்டுமணிநேரம் நிறுத்திவைத்த காவல்துறையின் கடமை உணர்ச்சிக்கு
தலைவணங்குகிறேன்..........

மம்தாவும், முலாயமும் காங்கிரஸ் அறிவிக்கப்போகும்  ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கும் விசயத்தை ஆயுதமாக வைத்து மத்திய அரசிடமிருந்து தங்களது மாநிலங்களுக்கான சிறப்பு நிதியைப் பெறுவதில் முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்......
நமது முதல்வரோ தன்சார்பாக ஒரு ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துவிட்டு அவருக்கு ஆதரவு திரட்டும் வேலையில் மும்முரமாக இருந்துகொண்டிருக்கிறார்..........

வாழ்க சனநாயகம் .............


கடந்த வாரத்தில் ஒரு விழாவில் பேசிய கனிமொழி...... இந்திய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து முக்கியப்பங்கு வகிப்பதாகவும் அதற்கு காரணம் கருணாநிதியின் அரசியல் நேர்மையும், மகாத்மா காந்தி முதல் நெல்சன் மண்டேலா உட்பட ஐந்தாறு மாபெரும் தலைவர்களின் பெயரைக்குறிப்பிட்டு அவர்களின் வழியில் அரசியல் செய்பவர் கருணாநிதி என்றும் பேசியதாக வாசிக்க முடிந்தது......

எல்லாம் ஓகே மேடம்............

ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த மாபெரும் தலைவர்களுடைய வாரிசுகளுக்கு இரண்டுலட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்யம் என்பதும் திஹார் ஜெயில் கதவுகளுக்கு எத்தனை கம்பிகள் என்பதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்..............

- அறந்தாங்கியான் -


Sunday, June 10, 2012

ப்ரிய துரோகி............



பின்னாளில் எப்பொழுதாவது
என் கல்லறைப் பக்கமாய் - நீ
நடக்க நேர்ந்தால்..........

கண்களை மூடிக்கொள்......

உன் பார்வை பட்டு
ஒருவேளை நான்
இரண்டாவது முறையாக
இறந்து போகலாம்...................

காதல் பரிசு......

அவளுக்கு நாளை
பிறந்த நாள்.........

அன்பளிப்பாய்
என்ன வாங்கலாம்......???

உடம்பின் ஒட்டுமொத்த செல்களும்
ஒரு புள்ளியில் கூடி யோசிக்க......

கட்டுக் கட்டாய் காற்று நிறைந்த
சட்டைப் பையை தடவியபடி
மனசு.............

நினைவுகள்.........


கலங்கித் தெளிந்துகொண்டிருக்கிறது
நான் என்ற குளம் ..........

கரையில்
கல்லோடு காத்திருக்கும் 
அவள் நினைவுகள்.......



Thursday, June 7, 2012

பதறிய நிமிடங்கள்.........


எல்லாமே வேடிக்கைதான்......
நமக்கு நடக்கும்வரை.

'' என் குழந்தைக்கு சுகமில்லை '' என்று சொன்னவர்களிடம்
இறைவன் இருக்கிறான் கவலைப்படாதே என்ற ஒற்றை வரியை
மனப்பூர்வமாகவோ அல்லது மரியாதைக்கோ சொல்லிவிட்டு
கடந்திருக்கிறேன் எத்தனையோ முறை...........

இன்று காலையில் உணர்ந்தேன், அந்த ஒற்றை வரி போதாதென்று.....

அந்நிய தேசத்து எந்திர வாழ்க்கையின் எப்போதும் போலான விடியல்களுக்கிடையில் ........
எனக்கான இன்றைய சூரியனை சற்று சீக்கிரமாகவே அழைத்து வந்தது அலைபேசி ........ அவள்தான் அழைக்கிறாள் ........

அன்பு மனைவியின் அதிகாலை அழைப்பு ஆச்சர்யப்படுத்த
காது கொடுத்தேன்.......
அழுகை மோதி உடைந்து விழுந்த - அவளின்
வார்த்தைகளை நான் ஒன்றுசேர்த்து ஒட்டியபோது
'நான்' என்ற கண்ணாடி நழுவியது........

என் செல்ல மகளுக்கு சுகமில்லையாம் .........

உள்ளூர் மருத்துவரோடு உடன்பட மறுத்த
காய்ச்சலின் கனம் தாளாமல்
தாயின் தோளில் தலை சரிந்து விட்டதாம் -என்
ஒன்பது மாத உலக அதிசயம்......

அடுத்த நகரத்து சிறப்பு மருத்துவரை பார்க்கவேண்டும்...

இரவு முழுக்க இரவின் கால்பிடித்து அழுதிருக்கிறாள்
சீக்கிரம் விடியச்சொல்லி...........

நாடி பிடித்துப்பார்த்த நகர மருத்துவன்
''அப்போல்லோ'' வில் அனுமதிக்க வேண்டுமென பரிந்துரைக்க.....
பதறிப் பறந்திருக்கிறாள்.....
இடையே என்னையும் அறிவித்து விட்டாள்......

நான் கடல்கடந்தபோது கருவிலிருந்த -என்
செல்ல மகள்..... அவளின்
முத்தங்களை தொலைபேசியிலும்
ஸ்பரிசங்களை புகைப்படத்திலும் மட்டுமே
உணர்ந்து கொண்டிருக்கிறேன் இன்றுவரை............

''அப்போல்லோ மருத்துவமனை''

நடுத்தர வர்க்கத்தின் அகராதியில்
அர்த்தம் இல்லாத ஒரு வார்த்தை.......

நிலைமையின் கழுத்தை நிஜம் நெரிக்க.....

இல்லாத சேமிப்பின் எல்லாப் பக்கங்களையும்
புரட்டிப்பார்த்தது விழிகள்......

சேமிப்புக்கணக்கின் எல்லா இலக்கங்களிலும்
பூஜ்யங்கள் புன்னகைக்க........

ஒரு நொடியில் உலகம் எதிரியாகிப்போனது......

நண்பர் கணேஷ் க்ரிஷ் க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு
நண்பன் ஆசாத்தை அழைத்து விபரம் சொன்னேன்......

'' எதற்கும் கலங்காதே '' இறைவனும் நாங்களும் இருக்கிறோம் என்றான் ......
அந்த வார்த்தை ஆசுவாசமாய் இருந்தது ......

நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டிருந்த மௌனத்தின் சுமையை
அடுத்த அலைபேசி அழைப்பு குறைத்தது.......

சென்னையிலிருந்து ரஹீம் கஸாலி.......

என்னடா ஆச்சு?...........

நிதானமாய் கேட்டான்............

''அன்பு மகளுக்கு அப்போல்லோவில் அனுமதி''
என்னால் முடிக்க முடியவில்லை......

என் உதிராத கண்ணீரை உணர்ந்திருப்பான் போல......

'' அவசியம் என்றால் அப்போல்லாவைவிட
நல்ல மருத்துவமனையை தேடச்சொல்......
அச்சடித்த காகிதங்களுக்கு நான் பொறுப்பு''

சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டான்.....

பளிச்சென்று ஒரு விஷயம் புரிந்தது.....
பணம் என்பது அடுத்த நிமிடத்தை காப்பாற்றும்
ஆனால் ஒரு வார்த்தை, அது சொல்லப்படும் விதத்தால் சொல்லப்பட்ட நிமிடம் எவ்வளவு நம்பிக்கை நிறைந்ததாகிறது...........
அந்த வார்த்தை போதுமானதாய் இருந்தது எனக்கு -நான்
அடுத்து என்ன செய்யவேண்டும் என்று யோசிப்பதற்கு ......


அங்கே எக்ஸ்ரேக்களும் ஸ்கேன்களும் இரத்தப் பரிசோதனைகளும்
இன்னும் என்னென்னவோக்களும் அரங்கேறிக்கொண்டிருக்க ....

இடையிடையே அழைத்தபடி நானும்
இடைவிடாமல் அழுதபடி அவளும்..........

இதற்கிடையில் முகப்புத்தகத்தில் -நான்
இளைப்பாறும் எல்லா மூலைகளிலும்
என் மகளுக்கான பிரார்த்தனைகளை
தொடங்கி வைத்திருந்தார்கள் நண்பர் திப்பு சுல்த்தானும்
கணேஷ் க்ரிஷும்.......

'' உங்கள் மகள் அபாய கட்டத்தை கடந்துவிட்டாள் '' என்ற செய்தியை சுமந்து வந்த
அந்த அழைப்பு ஏற்படுத்திய சந்தோஷத்தை இதற்கு முன் நான் உணர்ந்ததே இல்லை.......

எதையோ சாதித்த சந்தோஷத்துடன் இந்த பதிவை எழுதுகிறேன்....
என்னைவிட அதிக நம்பிக்கையுடன் இருந்த நண்பர்களையும் என்னைவிட அதிகமாய் பிரார்த்தித்த நண்பர்களையும் நினைத்தால் கர்வமாய் இருக்கிறது எனக்கு............

''நன்றி'' என்ற ஒற்றை வார்த்தையால் என் உணர்வுகளை பிரதிபலித்துவிடமுடியாது ........ எனவே....................................................................................

Saturday, June 2, 2012

பவர் ஸ்டாரும்..... கோபிநாத்தின் கோமாளித்தனமும்........


எல்லாரும் எழுதிட்டாங்க இதப்பத்தி .......
நான் ஏன் எழுதல.......? அப்டீன்னு நாளைக்கு ஒரு கேள்வி வந்துடக்கூடாது பாருங்க .......... அதான்...... (ஹி ஹி ........)

நீயா? நானா? நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பவர் ஸ்டாரை அழைத்து
தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளின் மூலம்
தான் ஒரு ஊடகப் புலி(ளி) என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்
நீயா நானா கோபிநாத்.........

அவரது முதல் கேள்வியிலேயே நான் புல்லரித்துப் போனேன் ........ ஏன் போலி கௌரவம் அவசியம்னு நெனைக்கிறீங்க.........? அப்டீன்னு அவரப்பாத்து...... இல்ல இல்ல பவரப்பாத்து கேட்டாரு............
போலி கௌரவம் அவசியம்னு பவர் ஸ்டார் எப்பவாச்சும் எங்கயாச்சும் பேட்டி குடுத்தாரா மிஸ்டர் கோபிநாத்.......????????

அடுத்து பவர பாத்து
'' உங்கள யாருன்னே எனக்கு தெரியாது ''னு சொல்லிட்டு அடுத்த கேள்விக்கு போனாரு.......
உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க மிஸ்டர் கோபிநாத், அவர சாரி பவர உங்களுக்கு நெசமாவே தெரியாதா........?

உங்களுக்கே தெரியாதஒரு ஆளை உங்கள் தொலைக்காட்சியின் மிக பிரபலமான(?????????????) ஒரு நிகழ்ச்சிக்கு எப்புடி பாஸ் சிறப்பு விருந்தினரா அழச்சீங்க.......?

இன்னொரு சிறப்பு விருந்தினரும் இந்த நிகழ்ச்சில இருந்தாரு திரு.செல்வப் புவியரசு அவர்கள்........ அவரு பவருக்கு சொன்ன கருத்து இருக்கே.........
அடடா...... பொன்னெழுத்துக்களால் பொறி(ரி)க்கப் படவேண்டிய கருத்து.....

''சினிமா அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் நடிக்க வந்துவிட்டார்''

புவியரசண்ணே....... நூறு சதவீத சினிமா பாரம்பரியத்தோடவும், பின்புலத்தொடவும்  சினிமாவுக்குள்ள நுழஞ்சு இன்னிக்கு கொடிகட்டிப் பறந்துகிட்டு இருக்கிற ஹீரோக்களோட முதல் படத்த முடிஞ்சா பாருங்கண்ணே.......

கடைசியாக ஒரே ஒரு விஷயம்.........

இவர்களின் கூற்றுப்படி பவர் போலி கௌரவத்தை விரும்புகிற ஒரு மனிதர் என்றே வைத்துக்கொண்டாலும் அந்த போலி கௌரவம் இந்த சமூகத்தையும் மக்களையும் எந்த வகையில் பாதித்தது.........?

போலி கௌரவத்திற்காகவும்,சுயநலத்திற்காகவும்,பரஸ்பரம் பழிவாங்கிக்கொள்வதற்காகவும் மட்டும் பதவியைப் பயன்படுத்தி கொண்டிருக்கும் கேடுகெட்ட அரசியல்வாதிகளை தங்கள் நிகழ்ச்சியில் அமரவைத்து இதுபோல் கேள்விக்கணைகளை தொடுக்கும் தைரியம் இருக்கிறதா இந்த மீடியாக்களுக்கு?

சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி என்ற விளம்பரத்துடன் தனிமனித இயல்புகளில் சேற்றை வாரி இறைக்க மேடை அமைக்கும் தரம் தாழ்ந்த நீக்கங்களை  இத்துடனாவது நிறுத்திக்கொள்ளுங்கள்...........
-அறந்தாங்கியான்-


Thursday, May 31, 2012

அன்புள்ள சங்மாவுக்கு.........

சொந்த வீட்டுலேயே சோறு இல்லேன்னு சொல்லிட்டாங்க.....

பக்கத்து வீட்டுக்காரம்மா தர்றேன்னு சொன்ன
பாயாசத்த நம்பி இப்புடி பசியோட பதவிக்களத்துல
குதிச்சுட்டீங்களே.........

பாவம் சார் நீங்க ............

உங்களப் பாக்கையில......
மதுரை வீரன் கோயிலும்
மஞ்சத்தண்ணி தெளிக்கப்பட்ட ஆடும்-என்
நினைவுக்கு வர்றத தவிர்க்கவே முடியல ........

1999 ல புள்ளைய கிள்ளிவிட்டுட்டு
2012 ல தொட்டிய ஆட்டி விடுறீங்களே........
என்ன கொடும சார்................

சரி சரி அத விடுங்க ...........

அவனவன்
கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்காக
கொலையே பண்ணுரானுங்க........

நீங்க ஜனாதிபதி பதவிக்காக
ஜஸ்ட் ஒரு மன்னிப்புத்தான கேட்டீங்க...........

பாபர் மசூதிய இடிச்சவங்களுக்கே...... அய்யய்யோ
தப்பா சொல்லிட்டேன்
பாரதீய ஜனதாக் கட்சிக்கே பதிமூணு நாள்தான்
ஆதரவு இருந்துச்சுங்கிறத
எதுக்கும் ஒரு மூ(ளை)லைல போட்டு வச்சுக்கங்க ..........


அமெரிக்க கருப்பினத்தை சேர்ந்த ஒருவர்
அங்கே அதிபராகும் போது
இந்தியப் பழங்குடியாகிய நான்
இங்கே ஆகக்கூடாதானு கேக்குறீங்களே

அது எப்புடி சார்
உங்களால மட்டும்
பருவமழைல பட்டாசு வெடிக்க முடியுது .......?

அப்புடியே 1988 ல இருந்து
இன்னிக்கு வரைக்கும்
அந்தப் பழங்குடிகளுக்கு நீங்க செஞ்ச
நல்லதை எல்லாம் பட்டியல் போட்டுருந்தீங்கன்னா
நல்லா இருந்துருக்கும் .........

50 வருஷ பாராளுமன்ற பாரம்பரியத்துல
1996 ல எதிர்க்கட்சில இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட
முதல் மக்களவை சபாநாயகர் நீங்கதான்கிறதும் ......

உங்களோட நுட்பமான அரசியல் அறிவுக்கு
இப்பவரைக்கும் சாட்சியம் வகிச்சுக்கிட்டிருக்கிற
A Life in politics என்ற உங்களோட புத்தகமும்......
உங்களுக்கு பெருமை சேக்குற விஷயங்கள்
என்பதில் மாற்றுக்கருத்தே இல்ல........

ஆனா........

அரசு செலவுல ஒலகம் சுத்த
ஆசைப்பட்டு........
சொந்த செலவுல சூனியம்
வச்சுக்கிறீங்களோ..............??????? னு
எனக்கு தோனுது..............

- அறந்தாங்கியான் -

Wednesday, May 30, 2012

என் அன்பான நேற்றுகளுக்கு........

முன்குறிப்பு 


வெறும் யதார்த்தங்களை மட்டும்
என்னுடன் வைத்துக்கொண்டு,
எழுத்து வானத்தை ஏக்கத்துடன்
பார்த்துக்கொண்டிருந்த என் முதுகில்
சிறகுகளைப் பொருத்தி .......

'' பயம் தவிர்த்துப் பற........'' என்று சொன்ன
அன்பு நண்பன் ரஹீம் கஸாலி  யோடு
தொடங்கும் முன் ஒரு வார்த்தை.......

நன்றி நண்பனே
சிறகு தந்த உன் நட்பிற்கு...............


                                                               

Tuesday, May 29, 2012

ஹி.... ஹி.........

போக்குவரத்து துறை அமைச்சர்
வருகிறார் .............

போஸ்டர் ஒட்டப்பட்டது
அரசுப் பேரூந்துகளில்..............


#இதுக்கு தலைப்பு ஒரு கேடா..............????

இணைய(யா) க்காதல்



எழுதி முடித்தகவிதையில் என்னை
முற்றுப்புள்ளியக்கிவிட்டு
அடுத்த கவிதைக்கு நீ
ஆயத்தமாகி விட்டாய்.......

தவறொன்றுமில்லை .......

வாசிக்கவே நாதியற்று கிடக்கும்
கவிதையில்
முற்றுப் புள்ளியின் கண்ணீருக்கென்ன
முக்கியத்துவம்?

காதல் ஒப்பனை கலைத்து வீசி
யதார்த்தம் பூசிக்கொண்டு நீ
இயல்பு வாழ்க்கைக்கு
திரும்பி விட்டாய் .........

இயல்பே காதலாகிப் போனதால்தானோ என்னவோ....
கலைக்கவும் தெரியாமல் கழுவித்
தொலைக்கவும் முடியாமல் நான்......

அன்றெனக்குத் தெரியவில்லை......
நான் அகத்தில் பூசிய காதலை நீ
நகத்தில் பூசியிருந்தாய் என்று ............

சூழ்நிலையின் முதுகில்
காரணங்களை அடுக்கிவிட்டு
நானற்ற திசையில் நீ
பயணத்தை தொடங்கி விட்டாய்........

ஒரு பயணத்தின் நடுவே சிறகுடைந்து
விடியாத இரவுக்குள் வீழ்ந்து கிடக்கிறேன் நான் ......

உன்னிடம் பதிலில்லாத ஒரு கேள்வி
என்னிடம் பாக்கி இருக்கிறது......

அன்று உன்னை மட்டும்
சுமந்த இதயத்தில்
இன்று உன் நினைவுகளைச்
சுமக்கிறேன் .........

அன்று என்னை மட்டுமே
சுமந்த இதயத்தில் இன்று நீ
எவனையோ சுமக்கிறாய் ......

எப்படி முடிகிறது உன்னால் மட்டும்.......

உன்னைக் காயப் படுத்துவதற்காய் அல்ல.......
குடித்துக் குடித்துச் செரிக்க முடியாததை
எழுத்துக்களால் எரிக்க முயற்சிக்கிறேன்......

இணையக் காதலின்
இணையா கதல்களில் இனி
நமது காதலும் .....
இல்லை இல்லை
எனது காதலும்.........

_ அறந்தாங்கியான் _

Sunday, May 27, 2012

இலவசங்களுக்கு பலியாகும் இரைகள்




இலவச அரசியை கோழித்தீவனமாய் பயன்படுத்துகிறார்கள் - செய்தி .

கொழுப்பெடுத்தவர்கள் செய்யும் காரியம் இது.........

இலவசங்கள் சரியா தவறா என்ற அடிப்படை விசயத்திலேயே நம்மால் இன்னும் ஒரு சரியான முடிவுக்கு வரமுடியவில்லை.......

கல்வியையும் சுகாதாரத்தையும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டு 

கணிப்பொறியையும் கால்நடையையும் இலவசமாகக் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசுத் திட்டங்களின் பிண்ணனியில் நிஜமாகவே மக்கள்நலம் இருக்கிறதா....... ???

இழந்த பதவியைப் பிடிப்பதற்கோ அல்லது இருக்கும் நாற்காலியைத் தக்கவைத்துக் கொள்வதற்கோ ஆன இவர்களின் அரசியல் பந்தயத்தில் நாம் பலியாடுகள் என்பதுதானே உண்மை ........???

கொடநாடும் கோபாலபுரமும் கோடி கோடியாய் கொள்ளையடிப்பது தெரிந்தும்,.குடமும் குத்துவிளக்கும் கொடுத்தால் கோகிலா ஓட்டுப்போடுகிறாள்.......

குவார்ட்டருக்கும் கோழிபிரியாணிக்கும் கோவிந்தன் ஓட்டுப்போடுகிறான் .......

இலவசத்திட்டங்கள் அரசின் குற்றம் எனில் அதற்கு அதிகாரம் கொடுத்தது யார் குற்றம்??????

வேட்டை நாய்களுக்கு ஓட்டுப்போட்டு கோட்டைக்கு அனுப்பிவிட்டு , கடிக்கும்போது மட்டும் கதறுகிறோம்........
காயம் ஆறினால் கடித்ததை மறப்போம்.....

மறுபடியும் கொடிபிடித்து கோஷம் போட்டு ஓட்டுப்போட்டு அரியனையில் ஏற்றிவைத்து அழகு பார்ப்போம்........

நமக்கென்ன நாம் எப்போதும் "இரைகள்"தானே............