அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Sunday, August 26, 2012

அம்மாவும் அவளும் ......
காலம் தூக்கிப்பிடித்த வாழ்க்கைத் தராசின்
வலது தட்டில் வந்தவளும்....
இடது தட்டில் ஈன்றவளும்...

இடையில்
துல்லியமற்றாடும் முள்ளாய் நானும்..........

கருப்பு தினமா......???? இந்திய சுதந்திர தினம்...


இந்திய சுதந்திர தினத்தை ''கருப்புதினம்'' என்று  பிரகடனம் செய்த சில மனிதர்களை சமூக வலைத் தளங்களிலும், இணையப் பதிவுகளிலும் பார்க்க முடிந்தது........

இது ஒத்துக்கொள்ள முடியாத போலி சுதந்திரம், கார்ப்பரேட் முதலாளிகளுக்கான சுதந்திரம் , இங்கே சராசரி மனிதனுக்கான எந்த சுதந்திரமும் இல்லை, என்பவையான காரணங்களின் பிண்ணணியில் சுதந்திர தினத்தை புறக்கணிக்க சொல்லி வேண்டுகோள்...

ஆண்ட ஆண்டுகொண்டிருக்கிற அதிகார வர்க்கங்களிடம் இருந்து நம் மக்களுக்கு இன்னுமோர் சுதந்திரம் தேவை என்பதை நான் மறுக்கவே இல்லை....

ஆனால்....
அதற்கும் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்று  புரியவில்லை..... இந்தியக் கால்களில் பிணைக்கப் பட்டிருந்த பிரிட்டீஷ் சங்கிலிகளை உடைத்தெறிந்து வாங்கித்தந்த சுதந்திரத்தை, வசதியாய் இது  ''போலி சுதந்திரம்'' என்ற ஒற்றை வார்த்தையால் எப்படிப் புறக்கணித்து விட முடியும்.....?
காந்தியும் கட்டபொம்மனும் பகத் சிங்கும் நேதாஜியும் இவர்களைப் போல் இன்னும் லட்சக் கணக்கானவர்களும் செய்த தியாகங்களுக்கு நீங்கள் செய்யும்   மரியாதை இதுதானா.....?

ஒரு அந்நிய தேசத்தின் ஆதிக்கத்தின் கீழ் அடிமைகளாய் கிடந்த நமக்கு எத்தனையோ போராட்டங்களுக்கும் தியாகங்களுக்கும் பிறகு ஒருநாள் விடுதலை கிடைத்தது....
அந்த நாளைத்தான் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோமே ஒழிய ஜெயலலிதாவும் மன்மோகன் சிங்கும் கருணாநிதியும் வங்கித் தந்த சுதந்திரத்திற்கான தினத்தை அல்ல.....
தேசியக்கொடி ஏற்றி கடவுள் வாழ்த்துப் பாடி அந்தப் போராளிகளின் தியாகங்களை நினைவு கூர்ந்து தேசியகீதம் பாடி பிரிந்து செல்கிறோம்... இவ்வளவுதானே இந்த சுதந்திர தினத்தில் நாம் செய்கிறோம்.......

இதைக்கூட செய்ய வேண்டாம் என்று புறக்கணிக்கச் சொல்வதில் என்ன அடிப்படை நியாயம் இருக்கிறது....?
நாட்டைச் சுரண்டி நம்மை நடுத்தெருவில் ஆக்கிக் கொண்டிருக்கும் இந்த நயவஞ்சக நரிக்கூட்டத்திற்கு பாடம் புகட்டுகிறேன் என்று சொல்லி..
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சிறையிலிருந்து நாம் மீட்டெடுக்கப்பட்ட நல்ல நாளை கறுப்புக்கொடி காட்டி புறக்கணித்தல் தவறு என்ற  உணர்வு வரவே இல்லையா இவர்களுக்கு.....

சுதந்திர நாட்டின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி பிணந்தின்னி கழுகுகளுக்கு நாட்டைத் தாரைவார்த்துக் கொடுத்தது நாம் எல்லோரும் அடங்கிய மக்கள் சமூகம்தானே.....

அரசியல்குண்டர்கள் அடிமைப்படுத்திய நம் சமூகத்திற்கு இப்போதைய  தேவை விழிப்புணர்வு....
விழிப்புணர்வுக்கான ஆயுதமாய் தேசப் பற்றை தயவு செய்து கையிலெடுக்காதீர்கள் ......
அடிப்படையில் புறக்கணிக்கப் படவேண்டிய விசயங்கள் ஆயிரம் இருக்கிறது...
அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்....

இலவசங்கள் தருகிறேன் என்று எவனும் வந்தால் எட்டி உதைய சொல்லுங்கள்......

காசு கொடுத்து ஓட்டுக் கேட்பவன் முகத்தில் காறி உமிழச் சொல்லுங்கள்

முடிவாய்
ஒரு தேர்தலை புறக்கணிக்கச் சொல்லுங்கள்......

சுதந்திர தின புறக்கணிப்பு என்ற பிரச்சாரம் என்பது... நம்மை மூளைச் சலவை செய்யக் காத்திருக்கும் சில பிரிவினைவாத சக்திகளுக்கு நாமே சிவப்புக் கம்பளம் விரிப்பதாய் ஆகிவிடும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்..
                                                       
-அறந்தாங்கியான்-

Tuesday, August 14, 2012

சுதந்திர தினமும்.... பேஸ்புக்கும்....
இது அரசியல் வாதிகளுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குமான சுதந்திரம்...... இதை கொண்டாடித்தான் ஆக வேண்டுமா ....?- என்ற ரீதியில் சில பல பதிவுகளையும் பின்னூட்டங்களையும் இன்று முகப்புத்தகத்தில் பார்க்க முடிந்தது......

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது சரிதான் என்ற தோற்றத்தை உருவாக்கினாலும் அப்படி புறக்கணிப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது......

ஆயிரமாயிரம் தாலிக்கொடிகளும்,ஆயிரமாயிரம் தொப்புள் கொடிகளும் அறுத்தெறியப் பட்டிருக்கிறது இந்த சுதந்திரக் கொடிக்காக......

எத்தனை போராட்டங்கள் ... எவ்வளவு இழப்புகள்....?

வாழ்க்கை முழுவதும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வை, வருடத்தில் ஒருநாள் நினைவு படுத்திக் கொள்வதைக் கூட தவறென்று சொல்லி முதுகெலும்பற்ற காரணங்களால் அதை நியாயப் படுத்த முயல்வது என்ன மனநிலை என்று புரிய வில்லை.......

இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்காகவும், கார்ப்பரேட் முதலைகளுக்காகவும் வேண்டி நமது முன்னோர்கள் இந்த சுதந்திரத்தை பாடு பட்டு வாங்கவில்லை....

நாமும் நமது சந்ததியும் எல்லா உரிமைகளும் பெற்றவர்களாய் வாழ வேண்டும் என்பதற்காக மட்டும் தான்.......

ஆனால் நாம் என்ன செய்தோம்......?

இலவசங்களுக்கு ஆசைப்பட்டோம்.......
ஓநாய்களுக்கு ஓட்டுப் போட்டோம்......

ஓநாய்கள் தேசத்தை அம்பானிகளிடம் அடகு வைத்தது....

தவறு முழுவதும் நம்மிடம் வைத்துக் கொண்டு சுதந்திர தினத்தை புறக்கணிக்கச் சொல்வது நியாயமா........?