அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Thursday, June 7, 2012

பதறிய நிமிடங்கள்.........


எல்லாமே வேடிக்கைதான்......
நமக்கு நடக்கும்வரை.

'' என் குழந்தைக்கு சுகமில்லை '' என்று சொன்னவர்களிடம்
இறைவன் இருக்கிறான் கவலைப்படாதே என்ற ஒற்றை வரியை
மனப்பூர்வமாகவோ அல்லது மரியாதைக்கோ சொல்லிவிட்டு
கடந்திருக்கிறேன் எத்தனையோ முறை...........

இன்று காலையில் உணர்ந்தேன், அந்த ஒற்றை வரி போதாதென்று.....

அந்நிய தேசத்து எந்திர வாழ்க்கையின் எப்போதும் போலான விடியல்களுக்கிடையில் ........
எனக்கான இன்றைய சூரியனை சற்று சீக்கிரமாகவே அழைத்து வந்தது அலைபேசி ........ அவள்தான் அழைக்கிறாள் ........

அன்பு மனைவியின் அதிகாலை அழைப்பு ஆச்சர்யப்படுத்த
காது கொடுத்தேன்.......
அழுகை மோதி உடைந்து விழுந்த - அவளின்
வார்த்தைகளை நான் ஒன்றுசேர்த்து ஒட்டியபோது
'நான்' என்ற கண்ணாடி நழுவியது........

என் செல்ல மகளுக்கு சுகமில்லையாம் .........

உள்ளூர் மருத்துவரோடு உடன்பட மறுத்த
காய்ச்சலின் கனம் தாளாமல்
தாயின் தோளில் தலை சரிந்து விட்டதாம் -என்
ஒன்பது மாத உலக அதிசயம்......

அடுத்த நகரத்து சிறப்பு மருத்துவரை பார்க்கவேண்டும்...

இரவு முழுக்க இரவின் கால்பிடித்து அழுதிருக்கிறாள்
சீக்கிரம் விடியச்சொல்லி...........

நாடி பிடித்துப்பார்த்த நகர மருத்துவன்
''அப்போல்லோ'' வில் அனுமதிக்க வேண்டுமென பரிந்துரைக்க.....
பதறிப் பறந்திருக்கிறாள்.....
இடையே என்னையும் அறிவித்து விட்டாள்......

நான் கடல்கடந்தபோது கருவிலிருந்த -என்
செல்ல மகள்..... அவளின்
முத்தங்களை தொலைபேசியிலும்
ஸ்பரிசங்களை புகைப்படத்திலும் மட்டுமே
உணர்ந்து கொண்டிருக்கிறேன் இன்றுவரை............

''அப்போல்லோ மருத்துவமனை''

நடுத்தர வர்க்கத்தின் அகராதியில்
அர்த்தம் இல்லாத ஒரு வார்த்தை.......

நிலைமையின் கழுத்தை நிஜம் நெரிக்க.....

இல்லாத சேமிப்பின் எல்லாப் பக்கங்களையும்
புரட்டிப்பார்த்தது விழிகள்......

சேமிப்புக்கணக்கின் எல்லா இலக்கங்களிலும்
பூஜ்யங்கள் புன்னகைக்க........

ஒரு நொடியில் உலகம் எதிரியாகிப்போனது......

நண்பர் கணேஷ் க்ரிஷ் க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு
நண்பன் ஆசாத்தை அழைத்து விபரம் சொன்னேன்......

'' எதற்கும் கலங்காதே '' இறைவனும் நாங்களும் இருக்கிறோம் என்றான் ......
அந்த வார்த்தை ஆசுவாசமாய் இருந்தது ......

நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டிருந்த மௌனத்தின் சுமையை
அடுத்த அலைபேசி அழைப்பு குறைத்தது.......

சென்னையிலிருந்து ரஹீம் கஸாலி.......

என்னடா ஆச்சு?...........

நிதானமாய் கேட்டான்............

''அன்பு மகளுக்கு அப்போல்லோவில் அனுமதி''
என்னால் முடிக்க முடியவில்லை......

என் உதிராத கண்ணீரை உணர்ந்திருப்பான் போல......

'' அவசியம் என்றால் அப்போல்லாவைவிட
நல்ல மருத்துவமனையை தேடச்சொல்......
அச்சடித்த காகிதங்களுக்கு நான் பொறுப்பு''

சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டான்.....

பளிச்சென்று ஒரு விஷயம் புரிந்தது.....
பணம் என்பது அடுத்த நிமிடத்தை காப்பாற்றும்
ஆனால் ஒரு வார்த்தை, அது சொல்லப்படும் விதத்தால் சொல்லப்பட்ட நிமிடம் எவ்வளவு நம்பிக்கை நிறைந்ததாகிறது...........
அந்த வார்த்தை போதுமானதாய் இருந்தது எனக்கு -நான்
அடுத்து என்ன செய்யவேண்டும் என்று யோசிப்பதற்கு ......


அங்கே எக்ஸ்ரேக்களும் ஸ்கேன்களும் இரத்தப் பரிசோதனைகளும்
இன்னும் என்னென்னவோக்களும் அரங்கேறிக்கொண்டிருக்க ....

இடையிடையே அழைத்தபடி நானும்
இடைவிடாமல் அழுதபடி அவளும்..........

இதற்கிடையில் முகப்புத்தகத்தில் -நான்
இளைப்பாறும் எல்லா மூலைகளிலும்
என் மகளுக்கான பிரார்த்தனைகளை
தொடங்கி வைத்திருந்தார்கள் நண்பர் திப்பு சுல்த்தானும்
கணேஷ் க்ரிஷும்.......

'' உங்கள் மகள் அபாய கட்டத்தை கடந்துவிட்டாள் '' என்ற செய்தியை சுமந்து வந்த
அந்த அழைப்பு ஏற்படுத்திய சந்தோஷத்தை இதற்கு முன் நான் உணர்ந்ததே இல்லை.......

எதையோ சாதித்த சந்தோஷத்துடன் இந்த பதிவை எழுதுகிறேன்....
என்னைவிட அதிக நம்பிக்கையுடன் இருந்த நண்பர்களையும் என்னைவிட அதிகமாய் பிரார்த்தித்த நண்பர்களையும் நினைத்தால் கர்வமாய் இருக்கிறது எனக்கு............

''நன்றி'' என்ற ஒற்றை வார்த்தையால் என் உணர்வுகளை பிரதிபலித்துவிடமுடியாது ........ எனவே....................................................................................

21 comments:

 1. படித்து முடிக்கும் முன் கண்களில் நீர் கோர்த்து விட்டது ... வலி தான் அருகில் இருந்தாலே பயம் நெஞ்சை கவ்வும் நிமிடங்களில் கடல் கடந்து மருபூமியில் இருக்கும் உங்களின் அல்ல உங்களை போன்ற எந்தனையோ ஜீவன்களின் வலி இது.. நேரில் பார்க்காமல் அந்த பிஞ்சு கரங்களை தொடாமல் நம் உயிரின் உயிரை பிரிந்து வாழ்வதே கொடுமை.. அதிலும் இப்படி ஒரு சூழ்நிலை நரகம் தான்.. நண்பர்கள் இருக்கிறோம் கலங்காதீர்கள்... இறைவன் இருக்கிறன் இடிந்து போகாதீர்கள்.. போராடுங்கள்..

  ReplyDelete
  Replies
  1. போராட்டம் நமக்கு பழகிப் போனதுதான் என்றாலும் இது கொஞ்சம் பயமா இருந்துச்சு தல................ நன்றி தல.........

   Delete
 2. '' அவசியம் என்றால் அப்போல்லாவைவிட
  நல்ல மருத்துவமனையை தேடச்சொல்......
  அச்சடித்த காகிதங்களுக்கு நான் பொறுப்பு''

  உயிர் காப்பான் தோழன் என்கின்ற பழமொழிக்கு உயிர் ஊட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்.

  உங்கள் அன்பு மகளார் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறேன்.

  நட்புடன்
  அபுல் பஷர்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அபுல் பஷர்.........

   மகள் நலமாய் வீடு திரும்பிவிட்டாள்.............

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. assalam alaikkum ...

  iraivan un sakthi meeri sothipathu ellai....

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சகோ.......

   நன்றி.............

   Delete
 5. எதற்கு இப்ப இந்த விளாம்பரம்? தயவுசெய்து என் பேரை நீக்கிவிடவும்.

  ReplyDelete
  Replies
  1. பெயர் நீக்குறதுக்கு v.a.o இல்லாட்டி R.I கிட்ட போ............
   நான் என்ன தாலுக்காபீஸா நடத்துறேன்..........

   உணர்வுகள பதிவு பண்ணுனா அதுக்கு பேரு உங்க ஊர்ல விளம்பரமா??????

   #இதுக்கு என்ன திட்டப்போறானோ.............

   Delete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  படிக்க படிக்க கண்ணீர் தான் வந்தது. உங்கள் மனம் பட்ட பாடு, வலியில் துடித்த நிமிடங்கள் உணர முடிகிறது.

  அல்லாஹ் போதுமானவன். ஒருவனின் சக்திக்கு மீறி இறைவன் யாரைய்யும் சோதிப்பதில்லை.

  இவ்வேளையில் ஆறுதலாய் இருந்த அத்தனை பேருக்கும், உதவிய நல் உள்ளங்களுக்கும் இறைவன் நன்மைகளை அதிகமாக வழங்குவானாக.

  ReplyDelete
  Replies
  1. //அல்லாஹ் போதுமானவன். ஒருவனின் சக்திக்கு மீறி இறைவன் யாரைய்யும் சோதிப்பதில்லை.//

   நிச்சயமாக சகோதரி..........
   நன்றி...........

   Delete
 7. நல்லதே நடக்கும் .கவலை வேண்டாம்

  ReplyDelete
 8. சலாம்,

  கஸாலி இது சம்பந்தமா பேசிகிட்டே இருந்தான்... இப்ப குழந்தை நல்லா இருக்குன்னு கேள்வி பட்டேன்.. அத கேட்டதும்தான் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு....நாம் அருகில் இருக்கையில் குழந்தைக்கு எதுவும் என்றாலே மனம் பாடு படும்..தூர தேசத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது... அனைத்துக்கும் இறைவன் போதுமானவன்... கவலைபடதே நண்பா....

  ReplyDelete
  Replies
  1. நன்றி சிராஜ்....... மட்டைப்பந்து மைதானங்கள் ஞாபகம் வருகிறது சிராஜ்..... எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது....... அன்பு மகள் நலமாய் வீடு திரும்பி விட்டாள் இறைவனின் அருளால்.......

   Delete
 9. anna kadavulin asirvatham unga magalukku yeppaum undu......

  ReplyDelete
  Replies
  1. நன்றி...... அம்பாள்புரம் செந்தில்....

   Delete
 10. '' அவசியம் என்றால் அப்போல்லாவைவிட
  நல்ல மருத்துவமனையை தேடச்சொல்......
  அச்சடித்த காகிதங்களுக்கு நான் பொறுப்பு''ethai yar sonaro avar than en kavol avarai naan kumbidukiren GHIRAMATHAN

  ReplyDelete
 11. i can understand your feelings, because i lost my son and suffered a hell and still crying, crying and crying.
  karthik amma

  ReplyDelete